சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்மாய் தூர்வார அனுமதி பெற்ற நிலையில், விதிகளை மீறி கிராவல் மண் விற்பனை!!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்மாய் தூர்வார அனுமதி பெற்ற நிலையில், விதிகளை மீறி மண் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி அடுத்த பருத்தியூராம் கண்மாயை குடிமராமத்து மூலம்  தூர்வார அனுமதி பெற்ற அதிமுகவினர், அருகில் இருக்கும் நீர் பிடிப்பு காட்டு பகுதியில் கிராவல் மண் தோண்டி விற்பனை செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறி கண்மாய் அருகே 10 அடி ஆழத்திற்கு  மேலாக தோண்டப்பட்டு மண் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, காரைக்குடியில் 5 கண்மாய்கள் உள்ளன. அதில் 2 கண்மாய்கள் இடையே சாலைகள் அமைக்கப்பட்டதால், விவசாயம் பெரிதளவு பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர். மேலும், மீதமுள்ள 3 கண்மாய்களின் வழியாகத்தான் தற்போது வாழ்வாதாரம் பெற்று வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, தற்போது, கண்மாய்களில் மண் தோண்டப்படுவதால், அதிகளவு பள்ளம் ஏற்பட்டு வயல் நிலங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், வருடாவருடம் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைத்தபோதும்,  அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் முறைகேடாக மண் விற்பனை செய்யப்படுவதை நிறுத்த வேண்டுமென கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மண் அள்ளும் பணியை நிறுத்திவிட்டு வாகனங்களை வெளியேற்றின. இதனால், ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: