'பாரத்நெட் டெண்டரில் முறைகேடு நடைபெற்றது உறுதி': அமைச்சர் உதயகுமார் மீது ஊழல் வழக்கு பதிவு செய்க..அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்!!!

சென்னை: பாரத்நெட் டெண்டரில் முறைகேடு நடைபெற்றது உறுதியாகி இருப்பதால் அமைச்சர் உதயகுமார் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் புகார் அளித்திருக்கிறது. திமுக மற்றும் தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாரத்நெட் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டெண்டர் விதிகள் பாரபட்சமாகவும், போட்டிக்கு எதிரானதாகவும் உள்ளது என்று ரத்துக்கான காரணத்தையும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. எனவே இதன்முலம் முறைகேடு நிரூபணமாகி இருப்பதாக புகார் தெரிவித்திருக்கும் அறப்போர் இயக்கம்,  வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அன்ஸ்ராஜ் வர்மா, ரவிசந்திரன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

 குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யும் வகையில் ஒப்பந்த சரத்துகளை மாற்றி அமைத்தது குற்ற நோக்கமுடையது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக 2 ஆயிரம் கோடியில் பாரத்நெட் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாக கூறி, டெண்டரை மத்திய அரசு ரத்து செய்தது. டெண்டரில் உள்ள குறைகளை களைந்து மறு டெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: