செங்கல்பட்டு திருப்போரூரில் ரியல் எஸ்டேட் ஆட்களுடன் கிராம மக்கள் வாக்குவாதம்: கோயில் நிலம் வழியாக தனியார் சாலை அமைக்க எதிர்ப்பு!!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரியல் எஸ்டேட் ஆட்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் துப்பாக்கி சூட்டால் பதற்றம் நிலவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இலதூர் செங்காடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், துரைப்பாக்கத்தை சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பர் தனது நிலத்திற்கு கோயில் நிலம் வழியாக, சாலை அமைக்க, திட்டமிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ரியல் எஸ்டேட் ஆட்களுக்கும் கிராம மக்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனை தடுக்க சென்ற சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனின் தந்தை லட்சுமிபதியை, தாண்டவமூர்த்தி ஆட்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து லட்சுமிபதி தன்னிடமிருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மோதலில் ஈடுபட்ட எதிர்தரப்பில் உள்ள ஒருவருக்கு காயம் ஏற்பட்டதுடன், கார் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.

இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜே.சி.பி, ட்ராக்டர் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், அப்பகுதியில் மோதலின் பதற்றம் தணியாத காரணத்தினால், பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: