42.76 கோடியில் அரைகுறையாக நடந்த குடிமராமத்து பணி 110 ஏரிகளின் கரைகள் மழையில் உடையும் அபாயம்

திருவள்ளூர்: குடிமராமத்து இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு பின்பு வரைகூட இருந்து வந்த ஒரு மராமத்துப் பணியாகும். இதில் கோடைகாலங்களில், வேளாண் குடிமக்களில் வீட்டுக்கு ஒருவர் என வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தியும் பணிகள் மேற்கொண்டனர். ஏரிகள் போன்றவை சுதந்திர இந்தியாவில் பொதுப்பணித்துறை வசம் சென்றபின் குடிமராமத்துப் பணிகள் இல்லாமல் போயின. குடிமராமத்தின்போது ஏரியின் உட்பரப்பில் கரையின் உயரத்தைப் போல இரு மடங்கு தூரம் தள்ளி தூர் வாரத் தொடங்குவார்கள்.

அதாவது கரையின் உயரம் 10 மீட்டர் எனில் ஏரியின் உள்பகுதியில் 20 மீட்டர் தள்ளி தூர் வாருவார்கள். கரையின் அடிப்பகுதி பலவீனம் ஆகி அதனால் ஏரிக்கரை உடைந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்வார்கள். இதன் பெயர் தாக்கு எடுப்பது என கூறப்படும். இப்படி எடுக்கப்படும் ஏரியின் மண், மழைக் காலத்தில் ஏரி அறுந்து ஓடியிருக்கும் பள்ளங்களில் முதலில் கொட்டி சமப்படுத்துவார்கள். பின்னர் மண்ணைக் கொண்டு கரைகளை பலப்படுத்துவர். இந்தப் பணிகளுக்கு போக மீதம் இருக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மண்பாண்டங்கள் செய்வோர், வீடு கட்டுவோர் மற்றும் ஊரின் இதர தேவைகளுக்கும் மண் பயன்படுத்தப்படும்.

அடுத்ததாக, ஏரியில் வளர்ந்திருக்கும் புதர்கள், முள் செடிகள், மழைக் காலத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவார்கள். மதகுகள், கலங்கள்களில் இருக்கும் அடைப்புகள் நீக்கப்படும். இவைதான் குடி மராமத்தின் அடிப்படைப் பணிகள். ஆண்டு தோறும் குடிமராமத்துப் பணி மேற்கொள்ளப்படுவதால், நீர் நிலைகளில் கூடுதல் மழை நீரைத் தேக்கி வைப்பதாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. தூர் வாருவதற்காக தோண்டப்பட்ட சத்தான வண்டல் மண், வயல்களில் உரமாக இடப்படுகிறது. குடிமராமத்து திட்டம் என்பது தமிழரின் சுமார் 2000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நீர் மேலாண்மை திட்டம்.

தமிழகம் முழுவதும் தொடர் சங்கிகளாக இருந்த ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மக்களே முறைவைத்து பராமரித்து வந்த பாரம்பரிய தொழில் நுட்பமே குடிமராமத்து திட்டம். இதற்கு முன்னர் இதே எரிகளுக்காக செயல்படுத்திய திட்டங்கள் என்ன ஆனது என்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழக ஏரிகள், கால்வாய்களை புனரமைக்க எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.பொதுமக்கள் பங்கேற்புடன் குடிமராமத்து திட்டத்தை அமல்படுத்துவதற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள்  நடந்தது.

இதற்காக 2019-20 நிதியாண்டில் 30 ஏரிகளில் குடிமராமத்து பணிக்கு 10.17 கோடியும், 2020-21ல் 80 ஏரிகளில் குடிமராமத்து பணிக்கு ₹32.59 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், ஏராளமான பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது.கடந்த இரு ஆண்டுகளாக அரசியல்வாதிகள் தலையீட்டால், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளை முறையாக செயல்படுத்தாமல், அரசு நிதி வீணக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் கட்சியினர் வருமானம் கருதி, முறையாக ஏரிகளை புனரமைக்காமல், ஏரிகளில் இருந்த செடி, கொடிகளை அகற்றி, பொக்லைன் இயந்திரம் மூலம், மண்ணை அள்ளி வெளியே கரைமீது கொட்டிவிட்டு, கணக்கு காட்டப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முறையாக கரைகள் மீது மண்கொட்டி, அதை சமப்படுத்தி அதன்மீது கிராவல் மண் கொட்டி, 12 அடி அகலத்தில் சாலை அமைக்க வேண்டும். அப்போதுதான், கரைகள் உடைந்து சேதமானால், அந்த இடத்துக்கு மணல் மூட்டைகள் கொண்டு செல்லவும், அதிகாரிகள் ஜீப்பில் சென்று பார்வையிடவும் முடியும். ஆனால், மண் கொட்டப்பட்டதே தவிர அதை பலப்படுத்தவில்லை. அதன்மீது கிராவல் கொட்டி சாலையும் அமைக்கப்படவில்லை. இதனால், தற்போது பெய்துவரும் பருவமழையில், கரைகள் கரைந்து, உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும், கரையோரம் உள்ள சாலையும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

அரசின் மொத்த நிதியும் வீண்

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏரிகளை புனரமைப்பதற்காக, பல இடங்களில், குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆளும் கட்சியை சேர்ந்த விவசாயிகள், இந்த குழுக்களில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். இதனால், பணிகள் முறையாக நடக்கவில்லை. சில அதிகாரிகளும் அவர்களுக்கு துணை போய் விட்டனர். அரசியல் சூழ்நிலைகளால், ஆளும் கட்சியினரை தட்டிக்கேட்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இனி வரும் காலங்களிலாவது, ஏரிகளை புனரமைக்கும் பணிகளை அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அரசின் மொத்த நிதியும் வீணடிக்கப்படுவது உறுதி என்றார்.

மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும்

இத்திட்டத்தின்படி, நீர் நிலைகளை புனரமைக்க, வரத்துக்கால்வாய்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள், பிற நீர் நிலைகளை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், கட்டுமான பணிகள், நீர் வழித்தடங்களில் அடைக்கப்பட்டுள்ள முட் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய வேண்டும். குறிப்பாக நீர்நிலைகள் தேர்ந்தெடுத்து, நீர் ஆதாரங்களை பெருக்கி, விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கான முகாந்திரமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் முழுமை பெறவில்லை என்பது அனைவரது ஆதங்கம். இதே நிலை தொடர்ந்தால் நாடு இன்னும் சில ஆண்டுகளிலே அனைத்து வளங்களையும் இழந்து, மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

தண்ணீர் வீணாகும் நிலை

விவசாயிகள் கூறுகையில், கடந்த காலத்தில் குடிமராமத்து திட்டத்தில் பணிகள் தரமில்லாமல், அளவு சரியில்லாமல் செய்யப்பட்டுள்ளன. முறையாக பணிகள் மேற்கொள்ளாததால், மக்கள் வரிப் பணத்தை அதிகாரிகள் வீணடித்துள்ளனர். தற்போது முடிக்கப்பட்டுள்ள பணிகளால் நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாது. கிடைத்த நிதியை கடமைக்காக நிறைவேற்றியது போல் உள்ளது. இவ்வாறு செயல்பட்டால் விவசாயம் எப்படி செழிக்கும், நாடு எப்படி முன்னேறும்.இயந்திரங்களை கொண்டு ஒரு சில நாட்களிலே பணிகளை முடித்துவிட்டனர். கரைகளை உயர்த்தவில்லை. மடைகள், ெஷட்டர்கள் சீரமைக்கவில்லை. கால்வாய்கள் மராமத்து பார்க்கவில்லை. மடைகள் உடைந்துள்ளதால் கிடைக்கிற தண்ணீர் வீணாக வெளியேறும் நிலை உள்ளது என்றனர்.

Related Stories: