ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாலையோர கடை விவசாயிகள்: நகர் பகுதியில் இடம் ஒதுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:  தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை சாலையோரம் வைத்து விற்கும் விவசாயிகள் ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனால் தாங்கள் காய்கறிகளை விற்க நகர் பகுதியில் இடம் ஒதுக்கிதர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் சாலை இந்த சாலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் வயல்வெளியில் விளையும் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், முருங்கை, முள்ளங்கி, தக்காளி, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை அன்றாடம் அறுவடை செய்து சாலையோர கடைகள் அமைத்து விற்பனை செய்து வந்தனர். இதனால் அவர்களுக்கு வருமானம் கிடைத்தது. ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வாலாஜாபாத் தாம்பரம் சாலையில் எந்தவித போக்குவரத்தும் இல்லை. கோயில்கள் திறக்கப்படாததால் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படாததால் இந்த சாலைகளில் வந்து செல்பவர்களின் வாகனங்கள் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தங்கள் வயல்வெளிகளில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லும் சாலை இந்த சாலையை ஒட்டி ஊத்துக்காடு, நத்தாநல்லூர், தேவேரியம்பக்கம், வாரணவாசி, குண்ணவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விளையும் காய்கறிகளை அன்றாடம் அறுவடை செய்து விற்பனை செய்து வந்தோம்.

இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் காய்கறிகளை விரும்பி வாங்கிச் சென்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவினால் வாகனங்கள் வருவது குறைந்து சுபநிகழ்ச்சிகளும் கோயில்களும் திறக்காததால் சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களும் குறைந்ததால் இந்த காய்கறிகள் அன்றாட அறுவடை செய்துவிற்க முடியாத சூழல் நிலவுகின்றன. இதனால் எங்களுக்கு வருமானமும் இல்லை. மேலும் அறுவடை செய்த காய்கறிகளை சந்தைகளுக்கு எடுத்துச் சென்றால் அங்கு உரிய விலை கிடைப்பதில்லை.  இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் சாலையோர வியாபாரிகளுக்கு நிதி உதவியோ அல்லது நாங்கள் அறுவடை செய்யும் காய்கறிகளை விற்பனை செய்ய ஏதுவான இடம் நகர் பகுதியில் ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: