பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்தால் கைது நடவடிக்கை; தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்...பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!!!

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, வேலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகம் முழுவதும் தொற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் 74 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது மண்டலங்கள் வாரியாக குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிறமாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. பின்னர் மாவட்டங்களில் நோய் தொற்று அதிவேகமாக பரவியது. 6ம் கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இதில், பொதுபோக்குவரத்து, திரையரங்குகள், வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனாலும், வரும் 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த வாரம் முதல் நடைமுறையில் உள்ளது. இதன்படி இரண்டாவது ஞாயிற்று கிழமையான இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மருந்து கடைகள், பால், பத்திரிகை விற்பனை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இ-பாஸ் இன்றி வாகனங்களில் மாவட்டங்களை விட்டு மாவட்டம் சென்றாலோ அல்லது மாவட்டத்திற்குள் பயணித்தாலோ அவர்களை தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் ‘டிரோன் ’ மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வருவதை தடுக்க இன்ஸ்பெக்டர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: