×

குறைந்த ஆண்டு தண்டனை பெற்ற கைதிகளுக்கு பரோல் தரும் சிறை விதிகளில் திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை ேக.கே.நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். கடந்த 2001ல் நடந்த ஒரு கடத்தல் சம்பவத்திற்கு துணை போனதாக கே.கே.நகர் போலீசார் தமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தமிழ்செல்வனுக்கு விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது அவர் 2019 ஜூலை முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.இந்நிலையில், கணவருக்கு இதய நோய் இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க போலீஸ் எஸ்கார்டு இல்லாமல் ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்செல்வனின் மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது சய்புல்லா ஆஜரானார்.   அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி ஆஜராகி, மனுதாரரின் கணவர் சிறையில் ஒரு ஆண்டு 4 மாதங்கள்தான் சிறையில் இருக்கிறார். தண்டனை கைதிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று சிறை விதிகள் உள்ளது என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்செல்வன் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை தேவை என்றும், அவரது மகள்களின் கல்விச் செலவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்செல்வனுக்கு ஜூலை 9ம் முதல் ஆகஸ்ட் 7வரை விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை காலத்தில் அவர் வாரம் ஒருமுறை திங்கள்கிழமை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், சிறை விதிகள் அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் குறைந்த ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கும் ஒரே மாதிரியாக உள்ளதால் மனுதாரரின் கணவர் போன்ற கைதிகளின் உரிமை பறிக்கப்படுகிறது. எனவே, 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற்ற கைதிகளுக்கு விடுமுறை தருவதில் சிறை விதிகளில் திருத்தத்தை அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags : prisoners ,High Court ,Government of Tamil Nadu , Minimum year sentence, prisoners, parole, Government of Tamil Nadu, High Court
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...