×

ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு: 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி: இந்தியா சகஜ நிலைக்கு திரும்புகிறது

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் 100 ஆண்டில் இல்லாத நெருக்கடியை சந்தித்திருப்பதாகவும், இந்தியாவில் பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்புவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வு மாநாட்டில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ் பேசியதாவது: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் நாட்டின் பொருளாதாரம் சகஜ நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்திய நிறுவனங்களும், தொழில் துறைகளும் நெருக்கடியை எச்சரிக்கையுடன் எதிர்கொண்டுள்ளன.

ஆனாலும், விநியோக சங்கிலி தொடர் முழுமையாக எப்போது சகஜ நிலைக்கு திரும்பும், நுகர்வு நிலை எப்போது வழக்கமான நிலைக்கு மாறும், பெருந்தொற்றால் வளர்ச்சியில் எத்ததைய விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் இப்போதே கணிக்க முடியாது. கொரோனா வைரசால் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார, மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, உற்பத்தி, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் இதுவரையில்லாத வகையில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பாதிப்பு உலகளாவிய வகையில் முதலீடு, தொழிலாளர்கள் என அனைத்திலும் தொடர்கிறது.

கொரோனா பாதிப்பு அகன்றபின், அதன் பொருளாதாரத் தாக்கத்தின் விளைவாக வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கலாம். வங்கிகளின் முதலீடுகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு திட்டம் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : speech ,Governor ,RBI ,crisis ,India , Governor of RBI, Economy, India
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...