×

பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்க 81 சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு 32 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

* மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கனி, மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிக்க கோட்ட உதவி பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குப்படுத்தும் குழுக்களும், வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் அதிகம் கூடும் இடங்களான காய்கனி அங்காடிகள், மளிகை கடைகள்,

இறைச்சி கடைகள் மற்றும் மீன் அங்காடிகள் ஆகிய இடங்களில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் 81 சந்தைப் பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் கோட்ட உதவிப் பொறியாளர் (அ) இளநிலைப் பொறியாளரை தலைவராக கொண்டு காவல்துறை அலுவலர், மீன்வளத்துறை சார்பில் மீன்வள சுகாதார ஆய்வாளர், சம்பந்தப்பட்ட மார்க்கெட்டை சார்ந்த பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய 81 சந்தை ஒழுங்குப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு சரியான முறையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் பணிகள் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த சந்தை பகுதிகளில் சரியான முறையில் சமூக இடைவெளி கடைபிடித்தல், அனைத்து கடைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருதலை கண்காணித்தல் மற்றும் அனைத்து கடைகளிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா என கண்காணித்தல் போன்றவற்றை மேற்பார்வையிட வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள்.  

இந்தக் குழுவானது தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் அங்காடிகளை கண்காணித்து விதிமீறல்கள் இருப்பின் அந்த மார்க்கெட், அங்காடிகளை அபராதத்துடன் 14 நாட்களுக்கு மூடி சீல்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். சந்தை ஒழுங்குப்படுத்தும் குழுவானது அந்த வார்டு உதவிப் பொறியாளர் அவர்களால் தொடர்ந்து வழிநடத்தப்படும். சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து மார்க்கெட் மற்றும் அங்காடிகளை சார்ந்த பிரதிநிதிகள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு அங்காடிகளை சார்ந்த பிரதிநிதிகளுடன்  ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு விரிவான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Market Regulatory Commission 32 Monitoring Committees , Safety mechanisms, corona, curfew
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...