×

மாவட்டங்களில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை

* தினசரி பாதிப்பை வைத்து நடவடிக்கை எடுக்கும் அவலம்
* சுகாதாரத்துறை அலட்சியத்தால் இருமடங்காகும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தேனி, வேலூர், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் தினசரி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் சென்னை போன்று சுகாதார உட்கட்டமைப்பு வசதி என்பது பெரிய அளவில் இல்லை.

இந்த மாவட்டங்களில் மருத்துவகல்லூரி, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே ஓரளவு சுகாதார கட்டமைப்பு வசதி உள்ளது. மேலும், இந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் குறைவாகவே உள்ளது.  தற்போது  மதுரை 3018, சிவகங்கை 1095, நெல்லை 2048, நாகர்கோவில் 971, திருச்சி 1603 என மொத்தம் 19557 படுக்கைகள் உள்ளது. இதை தவிர்த்து கோவில்பட்டியில் 300, தென்காசி 350, திண்டுக்கல் 721, ராமநாதபுரம் 613 என மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மொத்தம் 9952 படுக்கை வசதிகள் உள்ளது. ஆனால், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன.

இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடனடியாக அனுமதிப்பதில் சிக்கல் உள்ளது. மேலும், அறிகுறி உள்ள நோயாளிகள் பரிசோதனை செய்து கொண்டால் கூட உடனடியாக முடிவு வருவதில்லை. இதனால், ஏற்கனவே, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை அவசர, அவசரமாக அனுப்பி வருகின்றனர். மேலும், பரிசோதனை முடிவு பாசிட்டிவாக இருந்தால் கூட படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்த பிறகே அவர்களுக்கு பாசிட்டிவ் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதற்குள், அவர்களின் வீடுகளில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

அந்த வகையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரே வீட்டில் 5 முதல் 10க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்படுள்ளனர். இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிககை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் சுகாதாரத்துறையின் அலட்சியம் தான் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த படுக்கை வசதி உட்பட சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மின்னல் வேகத்தில் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். இல்லையெனில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்படும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காணமாக சென்னையில் கொரோனாவை கட்டுபடுத்த மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த 1500 டாக்டர்கள், செவிலியர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு பணிக்கு திரும்பியுள்ளனர். அங்கு, அவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags : districts ,hospitals , Districts, corona, hospitals, bed shortages
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...