×

சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்து கொலை வழக்கு குடும்பத்தினரிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலீசாரால் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களது குடும்பத்தினரிடம் சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அரசு மருத்துவமனையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பேரில்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோரை கைது செய்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீசார் ெவயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை அதிகாரியான சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தனர். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து இரவில் சிபிஐ குழுவினர் நெல்லை திரும்பினர். இந்நிலையில் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார்சுக்லா தலைமையில் 7 அதிகாரிகள் நேற்று காலை 11.30 மணிக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டுக்கு சென்று விசாரணையை ெதாடங்கினர். ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள்கள் மற்றும், தாய்மாமன், உறவினர்களிடம் விசாரணை நடந்தது. அவர்களிடம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டபோது போலீசார் தரப்பில் உங்களுக்கு தெரிவிக்கப்பட்டதா? என்றும், குற்றச்சாட்டப்பட்ட போலீசார் அவர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் பல கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

விசாரணையின்போது வீட்டுக்குள் மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை. தங்கள் தரப்பில் இருந்து கொண்டு வரப்பட்ட மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு மீண்டும் விசாரணை நடத்தினர். காலை 11.30 மணிக்கு துவங்கிய விசாரணை, மாலை 6.45 மணி வரை 7 மணி நேரம் நீடித்தது. விசாரணையின் இடையே சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு, மாலை 4 மணிக்கு சென்றது. ஜெயராஜ், பென்னிக்சுக்கு மருத்துவ சான்று அளித்த அரசு டாக்டர் வினிலா விடுப்பில் இருப்பதால், தலைமை மருத்துவர் ஆத்திக்குமார் மற்றும் டாக்டர், நர்ஸ்களிடம் விசாரணை மேற்கொண்டது. அப்போது பென்னிக்ஸ் மாமாவையும் அழைத்து சென்றனர்.

அவர் மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகள் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் கூறிய தகவல்பற்றியும் விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்துக்கு பிறகு 6 மணியளவில் ஜெயராஜ் வீட்டுக்கு திரும்பினர். மாலை 6.40 மணியளவில் ஜெயராஜ் வீட்டில் விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்ட சிபிஐ குழுவினர், மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இரவு 7.05 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் விசாரணையை முடித்துக் கொண்டு நெல்லை திரும்பினர்.

18 இடங்களில் ரத்தக்கறை
விசாரணை தொடர்பான ஆவணங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள், ரத்தக்கறை படிந்த 2 லத்திகள் ஆகியவற்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். தந்தை, மகன் தாக்கப்பட்டு கொலையான சம்பவத்தின் போது காவல்
நிலையத்தில் உள்ள டேபிள்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ் அணிந்திருந்த ஆடைகள், லாக்கப் அறை, கழிப்பறை மற்றும் சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்ற வாகனத்தின் இருக்கை உள்ளிட்ட 18 இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசாருடன் சிபிஐ அதிகாரிகள் நெல்லையில் ஆலோசனை
சாத்தான்குளத்தில் விசாரணையை முடித்துக்கொண்டு சிபிஐ அதிகாரிகள் இரவு 8 மணிக்கு நெல்லை வந்தடைந்தனர். வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் குழுவினர், ஏற்கனவே சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான 5 பேருடன் ஆலோசனை நடத்தினர். இது இரவு 9 மணி வரை நீடித்தது. சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்றும் சாத்தான்குளத்தில் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும், தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை, கிளை சிறையிலும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.

சோகத்துடன் நாய்
பென்னிக்ஸ் வளர்த்த நாய் சிபிஐ அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்களை சுற்றி சுற்றி வந்து அவர்கள் முகத்தை சோகத்துடன் பார்த்தவாறு நின்றது. ஆனால் யாரை பார்த்தும் குரைக்கவில்லை.

Tags : CBI ,Sathankulam , Sathankulam, father, son, beaten to death case, CBI
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...