எச்டிஎப்சி நிறுவனத்தில் சீன மத்திய வங்கியின் பங்கு 1 சதவீதத்துக்கும் கீழ் சரிவு

பீஜிங்: எச்டிஎப்சி நிறுவனத்தில் சீன மத்திய வங்கி வைத்திருந்த பங்கு மதிப்பு ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. எச்டிஎப்சி நிறுவனத்தில் சீன மத்திய வங்கி  0.8 சதவீத பங்குகளை வைத்திருந்தது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, சீன மத்திய வங்கி எச்டிஎப்சி நிறுவனத்தில் 1.75 கோடி பங்குகளை கொண்டிருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் எச்டிஎப்சி நிறுவனத்தில் சீன மத்திய வங்கி 1 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கியது தெரிய வந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  மும்பை பங்குச்சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம்  வர்த்தக முடிவில் எச்டிஎப்சி நிறுவன பங்கு மதிப்பு 1701.95 ஆக இருந்தது. இதன்படி, சீன மத்திய வங்கி வைத்துள்ள பங்கு மதிப்பு 3,000 கோடி.

இந்த நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 70.88 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் எச்டிஎப்சி வங்கியில் வைத்திருந்த பங்குகள் சிலவற்றை சீன மத்திய வங்கி விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் எச்டிஎப்சியில் சீன மத்திய வங்கி வைத்துள்ள பங்குகள் ஒரு சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. செபி விதிகளின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் ஒரு சதவீதத்துக்கும் மேல் பங்கு வைத்துள்ள நிறுவனங்கள் பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால், எச்டிஎப்சி தற்போது வெளியிட்ட பட்டியலில் சீன மத்திய வங்கியின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: