83 தொகுதிகளில் வெற்றி சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆளும் கட்சி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா பாதுகாப்புடன் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பீப்பிள் ஆக்சன் கட்சி 83 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி கடந்த 1965 முதல் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், இங்கு நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 26 லட்சம் பேர் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் நேற்றே வெளியிடப்பட்டன. இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி, மொத்தமுள்ள 93 இடங்களில், 83 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இம்முறை இக்கட்சிக்கு 61.24 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. இது குறித்து பிரதமர் லீ செய்ன் லுங் கூறுகையில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ததற்கு அனைவருக்கும் நன்றி. வாக்கு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், எங்கள் கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.  மேலும், கொரோனா நெருக்கடி காலத்தில், மக்கள் எதிர் கொண்ட பிரச்னைகள், நிச்சயமற்ற தன்மையை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன’’ என்றார்.

மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் லீ செய்ன் லுங்கிற்கு வாழ்த்துகள். சிங்கப்பூர் மக்களின் அமைதியான, வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: