எம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி பேரம் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜ முயற்சி: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு

* 2018 டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

* 200 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 124 எம்எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது.

* இவர்களில் 107 பேர் காங். எம்.எல்.ஏக்கள், 12 சுயேச்சைகள், இதர கட்சிகளை சேர்ந்தவர்கள் 5 பேர்.

ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி தருவதாக பாஜ பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜ முயல்வதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மாநிலங்களவை தேர்தல் எந்த சச்சரவுமின்றி சுமூகமாக முடிந்தது. இந்நிலையில், தனது ஆட்சியை கவிழ்க்க பாஜ தொடர்ந்து முயற்சிப்பதாக அசோக் கெலாட் மீண்டும் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஆனால் பாஜ தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் ஆட்சி நடப்பதை பிரதமர் மோடியாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல குழப்பத்தை விளைவிக்கிறார்கள். இதில் பாஜ அனைத்து எல்லையையும் மீறி விட்டது. எனது ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து தனது முயற்சிகளை அதிகரித்து வருகிறது. கட்சி மாறுவதற்கான எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி தருவதாக அவர்கள் விலை பேசி இருக்கிறார்கள். முன்பணமாக ரூ.10 கோடியும், ஆட்சியை பிடித்ததும் ரூ.15 கோடி தருவதாகவும் பேரம் பேசியிருக்கிறார்கள்.

இது அவமானகரமானது. 2014ல் மத்தியில் பாஜ வென்ற பிறகு அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது. கோவா, வடகிழக்கு மாநிலங்களில் அவர்கள் எப்படி ஆட்சியை பிடித்தார்கள் என்பது அனைவரும் அறிந்த கதை. குஜராத்தில் மாநிலங்களவை தேர்தலின் போது, 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்து 2 எம்பி இடங்களை பிடித்தார். இதே பாணியை ராஜஸ்தானிலும் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை.

எங்கள் ஆட்சி நிலையாக இருக்கிறது. அது மட்டுமல்ல, நிச்சயம் ஐந்தாண்டு ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். பாஜவின் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பாரதிய ஜனதா மறுப்பு: ராஜஸ்தான் மாநில பாஜ தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பை கையாளத் தெரியாத முதல்வர் கெலாட் மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார். அவர் லாஜிக் இல்லாமல் பேசுகிறார். உட்கட்சியில் பல பிரச்னை இருக்க, அதை மறைப்பதற்காக பாஜ மீது பழி போடுகிறார். கெலாட் அரசுக்கு போதிய பெரும்பான்மை இருந்தால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை’’ எனக் கூறினார்.

2 பேர் சிக்கினர்

காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி மாற வைக்க குதிரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் தரப்பில் சிறப்பு போலீஸ் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதன்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் குதிரை பேரம் நடத்த முயன்றவர்கள் என்பது தெரிய வந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: