×

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலியானதாக தகவல்

டமாஸ்கஸ்: சிரியாவின் கிழக்குப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 35 பேர் பலியாகினர். இதில் இரண்டு மூத்த தளபதிகளும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வான்வழித் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை நடந்து வருகிறது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.



Tags : Airstrikes ,Syria ,militants ,pro-Iranian ,terrorists , Syria, Iran, terrorists
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி