×

பஞ்சாயத்து தீர்ப்புபடி ஒரே நேரத்தில் திருமணம்; வாலிபரை கரம்பிடித்த காதலியும், நிச்சயத்த பெண்ணும்... மத்திய பிரதேசத்தில் விநோதம்

பெத்துல்: மத்திய பிரதேசத்தில் காதலித்த பெண்ணும், பெற்றோர் பார்த்து நிச்சயித்த பெண்ணும் ஒரே வாலிபரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட விநோத சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் பெத்துல் நகரைச் சேர்ந்த சந்தீப் யுகே என்பவர், கோடடோங்ரி அடுத்த கெரியா கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்தார். மணப்பெண்களில் ஒருவர் ஹோஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மற்றொரு பெண் கோடடோங்ரி அடுத்த கோயலாரி கிராமத்தைச் சேர்ந்தவர். இதில் மணமகன் சந்தீப் யுகே, போபாலில் படிக்கும் போது ஹோஷங்காபாத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

இதற்கிடையே, சந்தீப் யுகேவின் ெபற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணை தேடி பிடித்து திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதற்காக பெற்றோர் பார்த்த பெண்ணுடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவ்விவகாரம் காதலியின் குடும்பத்திற்கு தெரியவந்தது. அதனால், மூன்று குடும்பத்தினரும் சேர்ந்து உள்ளூர் பஞ்சாயத்தாரை அணுகினர். அப்போது சந்தீப் யுகேவை காதலித்த பெண்ணும், பெற்றோர் முடிவு செய்த பெண்ணும் பஞ்சாயத்தாரிடம் ஒரு முடிவை தெரிவித்தனர். அதாவது, இருவரும் சந்தீப் யுகேவுடன் சேர்ந்து வாழத் தயாராக இருப்பதாகவும், இருவரும் சந்தீப் யுகேவையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு, மூன்று குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். அதையடுத்து, திருமண விழா கெரியா கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சந்தீப் யுகே இரு மணப்பெண்களையும் மணந்தார். பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில், இரண்டு பெண்களை ஒரே மணமகன் திருமணம் செய்து கொண்ட விநோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மேற்கண்ட திருமணம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை. கோடடோங்ரி தாசில்தார் மோனிகா விஸ்வகர்மா, இந்த திருமணத்திற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறினார். இந்த திருமண விவகாரம் குறித்து வருவாய் துறையும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Panchayat ,Madhya Pradesh , Panchayat, Marriage, Madhya Pradesh
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு