×

கனமழையால் கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்

திருப்புவனம்: கனமழை காரணமாக கீழடி, அகரம், கொந்தகை, மணலூரில் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூரில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. கீழடியில் எட்டு குழிகளும், கொந்தகையில் ஆறு குழிகளும், அகரத்தில் ஆறு குழிகளும், மணலூரில் ஐந்து குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதுமக்கள்தாழி, குழந்தை மற்றும் விலங்குகளின் எலும்பு கூடு, வண்ண பானைகள், உலைகலன், சமையல் பானைகள், பாசி, இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் பணிகள் நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து அகழாய்வு பணிகள் மீண்டும் துவங்கி நடந்து வருகின்றன. திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. திருப்புவனத்தில் 80.2 மி.மீ. மழை பதிவானது. மழையால் கீழடி, அகரம், கொந்தகை, மணலூரில் அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான குழிகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தாலும் மழைநீர் புகுந்து மண் கெட்டித்தன்மையாக மாறிவிட்டது. இதனால் இன்று முழுவதும் மழைநீரை வெளியேற்றும் பணியிலும், குழிகளில் உள்ள ஈரப்பதத்தை உலர வைக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நாளையும் இப்பணி நடைபெறும் என்பதால் அகழாய்வு பணி நடைபெறாது.

Tags : Heavy rain, bottom excavation, shutdown
× RELATED தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது