×

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி......! தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்தவருகிறது. கொரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் ரூ.9.15 கோடியில் அமைக்கப்பட உள்ள பூங்கா கட்டுமானப் பணியை இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 44 மையங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தான் அதிக எண்ணிக்கையில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு 26 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. உயர்தர மருத்துவமனைகளில் தேவைகளுக்கு ஏற்ப பிளாஸ்மா சிகிச்சை விரிவுபடுத்தப்படும். பிளாஸ்மா சிகிச்சைக்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கப்பட உள்ளன. இச்சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Minister Vijayabaskar , Tamil Nadu, Plasma Therapy, Minister Vijayabaskar
× RELATED தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா...