பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2-ம் இடம்; முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 14-ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்...!!!

சென்னை: வரும் 14-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 6  கட்டங்களாக கடந்த ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. மேலும், ஞாயிற்று கிழமை தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,829 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 82,324 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து வரும் 14-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் நடத்து தொடர்பாகவும், குடும்ப அட்டைகளுக்கு மேலும் 1,000 வழங்குவது குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கொரோனா அதிகளவில் பரவும் நேரத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுவது முக்கியமாக கருதப்படுகிறது.

Related Stories: