செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதை மறு பரிசீலனை செய்க; மாநில அரசுக்கு அதிகாரம் தேவை...மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: பல்கலைக்கழக தேர்வுகள் தொடர்பான முடிவை மறு பரிசீலனை செய்ககோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கடந்த 4  மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த பல்கலைக்கழக தேர்வுகள்  அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி,  இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்தி முடிக்க  வேண்டும். தேர்வின் போது முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில்,  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கல்லூரி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துவது சிரமம். பிற மாநில, மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிக்கல் உள்ளதால் தேர்வு நடத்த முடியாது. தமிழகத்தில் பல கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதும் ஒரு காரணம். பருவத் தேர்வு நடத்துவதில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளை உயர்கல்வித்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கல்லூரி பருவத் தேர்வு தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளே எடுக்க அதிகாரம் தேவை. ஆன்லைன் மூலம் இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் நேரிடும். கல்லூரி தேர்வை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: