கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு, சில தளர்வுகளுடன் வரும் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் உடல் வெப்பநிலை பரிசோதனையில், கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், கலெக்டர் பொன்னையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும், குன்றத்தூர் ஒன்றியம் பெரிய பணச்சேரி மற்றும் சிறுகளத்தூர் ஆகிய பகுதிளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று, பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, சத்து மாத்திரைகள், எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் ஆகியவை வழங்குவதையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களின் வீடுகளில் தடுப்புகள் அமைத்து, கண்காணிக்கப்படுவதையும் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், காஞ்சிபுரம் சப் கலெக்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: