ஆதி திராவிட விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்ப் செட்: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: ஆதி திராவிட விவசாயிகளுக்கு. 70 சதவீத மானியத்தில் சோலார் பம்ப் செட் வழங்க உள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண் நீர்ப் பாசனத்துக்கு தேவையான எரி சக்தியினை உறுதி செய்யும்  நோக்கத்துடன் 2013-14ம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு, விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்து கொடுத்து வருகிறது. சூரிய சக்தி பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் பாசனத்துக்கு தடையில்லா மின்சாரம் பெறமுடியும்.

இதைதொடர்ந்து, இந்தாண்டு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 13 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 8 எண்கள் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் ₹16.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்படுகிறது. இதில் மத்திய அரசின் 30 சதவீத மானியம், தமிழக அரசின் 40 சதவீத மானியம் என மொத்தம் 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும்.

5 முதல் 10 குதிரைத்திறன் வரையுள்ள நீர்மூழ்கி பம்பு செட்டுகள், தரை மட்டத்தில் அமைக்கும் மோனோ பிளாக் பம்பு செட்டுகள், இது வரை மின் இணைப்பு பெறாம நீர்ப் பாசனத்துக்காக, விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 9003090440 என்ற எண்ணுக்கும், செயற்பொறியாளர் , வேளாண் பொறியியல் துறை 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை, 9443363967 என்ற எண் அல்லது அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: