×

மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் காலமானார்

சென்னை: முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் மூத்த வக்கீலுமான வி.டி.கோபாலன் காலமானார்.  சென்னை உயர் நீதிமன்றத்தில்  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும், புதுச்சேரி அரசின் பிரதான மூத்த வக்கீலுமான வி.டி.கோபாலன் (77) நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். சேதுசமுத்திர திட்ட வழக்கு, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கு, புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜரானவர்.

கடந்த 2000 முதல் 2008 வரை காங்கிரஸ் அரசில் உதவி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியவர். தமிழகத்தில் நெடுஞ்சாலை மேம்பாடு தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் அரசுக்காக ஆஜரானவர். இவரது மறைவுக்கு ஐகோர்ட் நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் பி.வில்சன், எஸ்.பிரபாகரன், பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் இரங்கல் தெரிவித்துள்னர். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு நீதிபதி பவானி சுப்பராயன், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எம்பி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வி.டி.கோபாலன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்து கொள்கிறேன். கலைஞர் மற்றும் எனது தந்தை முரசொலி மாறன் மற்றும்  எங்களுடன் மிகுந்த ஈடுபாடும், மரியாதையும் கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன் மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞருக்கு மிக நெருக்கமானவர். திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்றிருந்தபோது- கலைஞராலும், கலைஞரின் மனச்சாட்சியான மறைந்த முரசொலி மாறனாலும் பரிந்துரைக்கப்பட்டு- அவரது திறமைக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர். வி.டி.கோபாலன் மறைவு வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கும்- நீதி பரிபாலனத்திற்கும் பேரிழப்பாகும் என இரங்கல் செய்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : VD Gopalan , Senior lawyer ,VD Gopalan , passed away
× RELATED மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன்...