×

குமரி எஸ்.ஐ. சுட்டுக்கொலை வழக்கில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 பேர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

நாகர்கோவில்: குமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் (57), கடந்த ஜனவரி மாதம் 8ம்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் திருவிதாங்கோட்டையை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்த தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இதில் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ. வுக்கு மாற்றப்பட்டது. இவர்களுடன் தொடர்புடையதாக  பெங்களூர், மும்பை, டெல்லியில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் என்.ஐ.ஏ. சார்பில், சென்னை புழலில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதில் முதல் குற்றவாளியாக அப்துல் சமீம், 2 வது குற்றவாளியாக தவுபீக் ஆகியோருடன், கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன் (53), பெங்களூரை சேர்ந்த மெகபூப் பாஷா (48), இஷா பாஷா (46), கடலூரை சேர்ந்த ஜாபர் அலி (26) ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு கொண்ட காஜா மொய்தீன், இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டு அப்துல் சமீம், தவுபீக் ஆகியோருக்கு  துப்பாக்கிகள் கொடுத்துள்ளார். இதற்கு மற்றவர்கள் உதவி செய்துள்ளனர்.

தமிழ்நாடு போலீசை குறி வைத்து தாக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் சதி திட்டம் தீட்டி உள்ளனர் என்ற தகவலும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. ஜனவரியில் தமிழ்நாடு போலீஸ் மெகபூப் பாஷா, காஜா மொய்தீன் ஆகியோரை பெங்களூரில் கைது செய்தனர். இதனால் ஏற்கனவே உள்ள திட்டப்படி தமிழ்நாடு போலீசை தாக்கி விட்டு தப்புவதற்கு வசதியாக கன்னியாகுமரி -  கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்து இருக்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Tags : NIA , Kumari SI, shooting case, NIA. charge sheet
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...