×

இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த என்ஜிடிக்கு சம்மி ஆதரவு

பார்படாஸ்: இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த தென் ஆப்ரிக்க வீரர் என்ஜிடிக்கு, வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சம்மி ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்  இனவெறி காரணமாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாய்டு, வெள்ளைக்கார போலீஸ்காரரால் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. விளையாட்டு வீரர்களும்  தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்ரிக்க பவுலர் லுங்கி என்ஜிடி, ‘இனவெறி பிரச்னையை  நாமும்  தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உலகின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் இனவெறிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதற்கு தென் ஆப்ரிகாவின் முன்னாள் வீரர்கள்  ரூடி ஸ்டெயின், பாப் சிம்காக்ஸ், போய்டா டிப்பனர் ஆகியோர் முகநூலில் எதிர் கருத்துகளை தெரிவித்திருந்தனர். அதிலும் டிப்பனர், ‘இனவெறி எதிர்ப்பு இயக்கம் ஒரு இடதுசாரி அரசியல் இயக்கத்தை தவிர வேறொன்றுமில்லை... என்று சொல்ல நான் பயப்படுகிறேன்’ என்று கிண்டலாக சொல்லியிருந்தார். கூடவே ஸ்டெயின், ‘தென் ஆப்ரிகாவில் வெள்ளை விவசாயிகள் தினமும்  விலங்குகளை போல்  படுகொலை செய்யப்படுவதை  புறக்கணிக்கும்போது, கறுப்பின வெறிக்கு எதிராக நிற்பவர்களுக்கு எனது ஆதரவு இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 ஆனால் என்ஜிடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த  வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சம்மி, ‘இனவெறிக்கு எதிரான  இயக்கம் குறித்து தென் ஆப்ரிகாவின் முன்னாள் வீரர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு உணர்வே..... நாங்கள் இந்த விஷயத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்கிறது.   என்ஜிடி நாங்கள் உன்னோடு இருக்கிறோம்’ என்று ட்வீட் செய்திருந்தார்.


Tags : Sammy ,NGD ,NGT , Voice, NGD, Sammy
× RELATED போ சாமி.. போ.. வழி விடு சாமி.. அரசுப்...