×

40 ஜனாதிபதிகளின் சாய்ஸ் 200 ஆண்டு பழமையான அமெரிக்க நிறுவனம் திவால்: உலக போர்களை சந்தித்தது கொரோனா சுனாமியில் சுருண்டது

நியூயார்க்:  அமெரிக்க ஜனாதிபதிகள் 40 பேருக்கு கோட், சூட் தைத்து கொடுத்த 200 ஆண்டு பழமையான ப்ருக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது.
அமெரிக்காவில் பெரு முதலாளிகள், அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், அரசு உயர்அதிகாரிகளை  பொருத்தவரை கோட், சூட் என்றால்  ப்ரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம்தான் அவர்களின் விருப்பம். இந்த நிறுவனம் 1818ம் ஆண்டு, அதாவது 202 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 250 ஷோரூம்கள் இந்த நிறுவனத்துக்கு உண்டு, இதுவரை ஆப்ரகாம் லிங்கன், ஒபாமா, டிரம்ப் வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த 40 பேர் இந்த நிறுவனம் தைத்து கொடுத்த கோட், சூட்தான் அணிந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு துவங்கியதுமே அமெரிக்காவில் பெரும்பாலான கம்பெனிகள் வீட்டிலிருந்தே வேலை திட்டத்துக்கு மாறிவிட்டன. இதனால், ப்ருக்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செமஅடி. வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போதும் கோட், சூட் அணிய அமெரிக்கர்கள் என்ன முட்டாள்களா? ஷார்ட்ஸ், டி ஷர்டுக்கு முக்கிய வாடிக்கையாளர்கள் மாறிவிட சேல்ஸ் கொஞ்சம் கூட இல்லை. எப்படியும் மீண்டு விடலாம் என்று நம்பிக்கையில் இருந்த நிறுவனம்,  இதற்கு மேலும் நஷ்டத்தை தாங்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதையடுத்து, திவால் நோட்டீஸ் கொடுத்துள்ள ப்ரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனம், 50 ஷோரூம்களை மூட போவதாக தெரிவித்துள்ளது. இரண்டு உலக போர்களை சமாளித்த இந்த நிறுவனம் தற்போது கொரோனா சுனாமியில் சுருண்டுவிட்டது.


Tags : Presidents ,Corona Tsunami. ,Old American Company Bankruptcy: World Wars ,Corona Tsunami , 40 Presidents, Choice 200, American Company, World Wars, Corona Tsunami
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்