×

சீனா மேல காட்டுற கோபத்தால் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்2 லட்சம் இந்திய மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பு: 3 லட்சம் கோடி வருவாய் இழக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: சீனா மேல் காட்டுகிற கோபத்தின் வெளிப்பாட்டால் சர்வதேச மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் 3 லட்சம் கோடி வருவாயை இழக்க அமெரிக்கா தயாராகிவிட்டது. இந்தியாவை சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் தற்போதைய அறிவிப்பின் மூலம் பாதிக்க உள்ளனர்.
கொரோனா விவகாரத்தில் சீனாவை வெறுக்கும் அமெரிக்கா, இப்போது அதன் குடியுரிமைத்துறை வெளியிட்ட ஓர் அறிவிப்பில், ‘ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியவேற வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும்.

அத்துடன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள்’ என்று தெரிவித்தது. இதனால், இந்தியா உட்பட பல நாடுகளின் மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2018-19ம் ஆண்டில் முதல் முறையாக 2,00,000-ஐ தாண்டியது. இந்த  எண்ணிக்கை 2012-13ம் ஆண்டில் 1,00,000க்கும் குறைவாக இருந்ததாக சர்வதேச கல்வி நிறுவனத்தின் (ஐஐஇ)  தரவுகள் கூறுகின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில்  தற்போது படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஜனவரி வரை 1,94,556 ஆக உள்ளது. அமெரிக்காவில் படிக்கும் பிற நாடுகளின் மாணவர்களை காட்டிலும், இந்திய மாணவர்கள் பயில்வது வேறுபட்டது. அதாவது 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் செய்முறை பயிற்சி பாடங்களை தேர்வு செய்து படிக்கின்றனர்.

இதனால், விசா  வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு வருடம் வேலை செய்ய அனுமதி கிடைக்கிறது. கிட்டதட்ட 12 சதவீத  இந்திய மாணவர்கள் மட்டுமே அமெரிக்காவில் பட்டப் படிப்புகளை படிக்க சேர்கின்றனர். அதே இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கு என்று பார்த்தால், குறைந்தது 45 சதவீதமாக உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் அமெரிக்காவால் படிப்பதால், அந்நாட்டின் பொருளாதாரத்தில்  முக்கிய வருவாய் ஈட்டமுடிகிறது. சர்வதேச மாணவர்கள் மற்றும் சர்வதேச  கல்வியாளர்களின் சங்கம் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், ‘சர்வதேச மாணவர்கள் மூலம் 41 பில்லியன் அமெரிக்கன் டாலர் (இந்திய ரூபாயில் 3,07,612 கோடி) வருவாய் கிடைக்கிறது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு துறைகளில் வெளிநாட்டை சேர்ந்த 4,60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2019  நவம்பரில் ஐஐஇ கல்வி நிறுவனங்கள் வெளியிட்ட ஆய்வில், ‘விசா விண்ணப்பம் தொடர்பான பிரச்னை, விசா தாமதங்கள் மற்றும் மறுப்புகள் போன்ற காரணங்களால் புதியதாக அமெரிக்காவில் பயில்வோர் எண்ணிக்கை சரிந்துள்ளது. ஆசியாவிலிருந்து, குறிப்பாக சீனா மற்றும்  இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதில்,  அமெரிக்க கல்வி நிறுவனங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியாகிலும், சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க குடியேற்றத்துறையின் தற்போதைய அறிவிப்பால், கிட்டத்தட்ட 2 லட்சம் இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படுவர். மேலும் அவர்கள் பயிலும் கல்லூரிகளில் ஆன்லைன் படிப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்றால், அவர்கள் இனி அமெரிக்காவில் தங்க முடியாது.

இதனால், இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்துக்கும்) அதிகமான மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயையும் இழக்க அமெரிக்கா இழக்க தாயாராக உள்ளது. சீனா மீது காட்டுகிற வெறுப்பு மற்றும் கோபத்தால், அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகி உள்ளது.

அட்டவணை
படிப்பில் இந்தியா 2ம் இடம்
ஆண்டு    மொத்த மாணவர்கள்    சீனா    இந்தியா    பிற நாடுகள்
2012-13     8,19,644    2,35,597    96,754    4,87,293
2013-14    8,86,052    3,93,205    1,02,673    3,90,174
2014-15    9,74,926    4,17,881    1,32,888    4,24,157
2015-16    10,43,839    3,28,547    1,65,918    5,49,374
2016-17    10,78,822    3,50,755    1,86,267    5,41,800
2017-18    10,94,792    3,63,341    1,96,271    5,35,180
2018-19    10,95,299    3,69,548    2,02,014    5,23,737



Tags : China ,Indian ,US , China, International Students, Indian Students, Higher Education Impact, USA
× RELATED சிஏஏ சட்டம் இந்தியாவின் உள்விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி