×

வீட்டுதோட்ட செடிகளை தாக்கும் மாவு பூச்சி முறையாக கவனித்தால் முற்றிலும் கட்டுப்படுத்தலாம்

காரைக்குடி:  காரைக்குடி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீட்டை ஒட்டியுள்ள தோட்டங்களில் சிறிய அளவில் காய்கறி, பூ செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் பெரும்பாலும் வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடப்பதால் தோட்ட பயிர்களின் மீது கவனம் திரும்பி உள்ளது. தற்போது இச்செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்துவது குறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் செந்தூர்குமரன் தெரிவிக்கையில், ‘செடிகளில் சாறு உறிஞ்சி வாழும் பூச்சிகளிலேயே மிகவும் பாதிப்பை இந்த வகை மாவுப்பூச்சிகள் ஏற்படுத்தும். இந்த வகை மாவு பூச்சிகளை வீட்டு தோட்டத்தில் உள்ள செம்பருத்தி செடி துவங்கி அனைத்து வகை செடிகளையும் தாக்கும். செடிகளில் அதிகளவிலான பாதிப்பை இந்த பூச்சிகள் உடனே ஏற்படுத்தி விடாது.

15 நாள் முதல் 30 நாட்கள் வரை பூச்சிகளின் தாக்கம் துவங்கி அதீத பாதிப்பை ஏற்படுத்தும். செடிகளை பராமரிப்பவர்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். செடியின் நுனிக்கொழுந்தில் முதலில் வெள்ளை நிறத்தில் பாதிப்பை உருவாக்கும் போதே மருந்து தெளித்தால் சரியாகிவிடும். பாதிக்கப்பட்ட செடிகளில் பகுதியை முழுவதும் நீக்கிவிட வேண்டும். பின்பு செடியின் மற்ற கிளைகளில் இங்கொன்று, அங்கொன்றாக இருக்கும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்த புரபனோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி கலந்து 3  நாள் இடைவெளியில் இரண்டு முறை காலை வேளையில் தெளிக்க வேண்டும். இந்த பூச்சிகள் அதிக வீரியமானது. நான்கு பூச்சிகள் மருந்திலிருந்து தப்பித்தாலும் 400 பூச்சிகளை உருவாக்கி விடும்.

எனவே 2 முறை மருந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஆங்காங்கே தென்படும் வெள்ளை பூச்சிகளை ஈரமான துணி கொண்டு மெதுவாக நீக்க வேண்டும். பின்பு 2 நாட்களுக்கு பிறகு உப்பில்லாத நன்நீரை காலை வேளையில் செடி நனையுமாறு தெளித்தால் பூச்சியை முழுவதுமாக நீக்கலாம்.  செடிகளை பராமரிப்பவர்கள் அவ்வப்போது தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். பூச்சி தாக்கம் பார்த்த அன்றே நல்ல தண்ணீரை வேகமாக பீய்ச்சியடித்தால் செலவில்லாமல் இதனை கட்டுக்குள் வைக்கலாம். 70 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் பாதிக்கப்பட்ட செடியின் பாகத்தை  துண்டிக்க வேண்டும். பயிரோ அல்லது நம் வீட்டுதோட்ட செடியோ அன்றாட கண்காணிப்பு மிக அவசியம்’ என்றார்.

Tags : houseplants , Flowering insect attacking houseplants Properly covered, it will withstand a great deal of adverse conditions
× RELATED தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு...