×

பாலிடெக்னிக் மாணவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து முட்டை, சாணி கரைசல் தலையில் ஊற்றி பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர்கள்

திங்கள்சந்தை : பிறந்தநாளை சிலர் வினோதமாக கொண்டாடி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். அதுவே அவர்களுக்கு வினையாக  மாறி விடுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது நண்பர்கள் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து பாலிடெக்னிக் படிக்கும் மாணவரின்  பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளனர்.  

முதலில் கேக் வெட்டி கொண்டாடியவர்கள், இரவு  திடீரென பிறந்த நாள் இளைஞரை  பிடித்து வந்து அருகில் உள்ள தோப்பில் மின்கம்பத்தில்  கட்டி வைத்ததோடு அவரது உடலில் தயிர், முட்டை, தக்காளி, போன்றவற்றை  அடித்து பூசியும் மாட்டு சாணி கரைசலை தலையில் ஊற்றியும் கொண்டாடியுள்ளனர்.  இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வினோத பிறந்த நாள் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில் இது போன்று சில இளைஞர்கள் ஒன்று கூடி வினோதமாகவும் விபரீதமாகவும் பிறந்த நாள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : birthday ,polytechnic student ,wrist , viral,Birthday ,Polytechnic Students
× RELATED ராமதாஸ் 82வது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து