அமெரிக்காவில் தொற்று உச்சம்!: கொரோனா பரவலால் கைதிகளை விடுவிக்க கோரிக்கை.. சிறைச்சாலை முன்பு திரண்டு குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்!!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதால் சிறைச்சாலை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் புதியதாக 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகளை கொண்டுள்ள அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒருநாளில் 60 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தொற்று பரவி வருவதால் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் எழுந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் குவென்டின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்களது வழக்கறிங்கர்கள் மற்றும் குடும்பத்தினர் வலியுறுத்தி, சிறைச்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அங்குள்ள கைதியின் தாய் ஒருவர் கூறியதாவது, எனது மகனின் உயிர் மிகவும் முக்கியமானது. அவனுக்கு குழந்தைகள் உள்ளன. ஆகையால் அவன் எங்களிடம் திரும்பி வர வேண்டும்.

இந்த கொரோனா பரவல் காரணமாக தனது மகனை இழந்துவிடுவேனோ என்ற பயம் தோன்றுகிறது. எனவே அவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். சான் குவென்டின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 1,400 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு 32 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் உச்சம் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் சிறைச்சாலை முன்பு திரட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: