ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மிகவும் நம்பிக்கைக்குரிய நோய்த்தடுப்பு மருந்தாக அதிபர் டிரம்ப் பார்க்கிறார்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மிகவும் நம்பிக்கைக்குரிய நோய்த்தடுப்பு மருந்தாக டொனால்டு டிரம்ப் பார்க்கிறார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில் நோயாளிகளுக்கு, மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த பலனை தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ உலகம் முழுவதும் பிரபலமானது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு தர பரிந்துரைத்தது.இதற்கிடையே இரு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை செய்தது.

இதன் இடைக்கால ஆய்வு அறிக்கையில், இரண்டு மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை மேற்கொண்டதில், இறப்பு விகிதம் குறையவில்லை அல்லது லேசான முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எனவே, ஹைட்ராக்ஸி குளோரோகுயின், லோபினாவிர் மருந்துகள் மீதான பரிசோதனையை கைவிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னனி கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை மிகவும் நம்பிக்கைக்குரிய நோய்த்தடுப்பு மருந்தாக தான் பார்க்கிறேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் ஒவ்வொரு நபரும் தங்கள் மருத்துவரிடமிருந்து ஆலோசனை பெறாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது, என்று  கூறியுள்ளார்.

Related Stories: