இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு விவகாரம் மத்திய அரசு பணிகளில் தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக பின்பற்றுவதில்லை என்ற தகவல் தெரியவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு கடந்த 14.3.2018 அன்று தமிழ்நாடு அரசால் கடிதம் எழுதப்பட்டது. இதற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் பெறப்படாததால், கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு  13.1.2020ல் கடிதம் எழுதப்பட்டது.

இதுகுறித்து, 6.6.2020 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம்  நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் ஒப்பளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது 11.6.2020 நாளிட்ட தீர்ப்பில் இக்கோரிக்கை தொடர்பாக மனுதாரர்களை உயர்நீதிமன்றத்தினை அணுகுமாறு அறிவுறுத்தியது.  

ஏழை எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் ‘நீட்’ தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 8ம் தேதி தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்’ தேர்வினை நடத்ததுவது மிகவும் கடினம்  என்றும், பிளஸ் 2  தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு, ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையமும் இதனை பரிந்துரை செய்யும் என்ற செய்திகளும் வந்துள்ளன. இடஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது.

இச்சூழ்நிலையில் மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில், வருமான உச்ச வரம்பில், ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தற்போது பின்பற்றப்பட்டு வரும் வளமான பிரிவினருக்கு உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமரை, முதலமைச்சர் கடிதம் வாயிலாக வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை என்றென்றும் காக்கும் அரணாக விளங்கும்.  இட ஒதுக்கீடு சமூக, கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

Related Stories: