தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டதா? 11 மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய குழு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்துள்ள 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து, கொரோனா நோய் அதிகம் பாதித்த 11 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மட்டும் நேற்று 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக வைரஸ் பரவி வருகிறது. நோயின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இதுவரை 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பார்வையிடவும், கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதா என்பது குறித்து ஆய்வு மற்றும் விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை 7 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழகத்திற்கு 3வது முறையாக நேற்று அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி, மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய அரசின் இணை செயலாளர் ராஜேந்திர ரத்னு, டாக்டர்கள் ரவீந்திரன், சுஹாஸ் தந்துரு, மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் பிரவீன், ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் சுவரூப் சாகு, சதீஷ் உள்ளிட்ட 7 பேர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் மற்றும் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று காலை 9.30 மணிக்கு அங்குள்ள கூட்ட அரங்கில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, காலை 11.30 மணிக்கு சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மத்திய குழுவினர் நேரில் சென்றனர். அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து சென்னையில் புதிதாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பரிசோதனை மையத்துக்கும்சென்று நேரில் ஆய்வு செய்தனர். அடுத்து சென்னை திருவிகநகர் மண்டலம் சூளை, அரிமுத்து தெருவில் நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டனர்.

புளியந்தோப்பு பகுதியிலும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். படாளம் பகுதியில் உள்ள கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கும் சென்று, நோய் பரவலை தடுக்க தமிழக அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகம் வந்த மத்திய குழுவினர் தலைமை செயலாளர் கே.சண்முகத்துடன் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, ராமநாதபுரம், சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய குழுவினர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆலோசனையின்போது, கொரோனா தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், தனிமைப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் விவாதித்தனர். தொடர்ந்து மத்திய குழுவில் உள்ள டாக்டர்கள், கொரோனா நோயை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் சில ஆலோசனைகளையும் வழங்கினர். இன்று மத்திய குழுவினர் சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு பணிகள் முடிந்ததும் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: