மாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(52). இவர்களது மகள் விமலா (17). தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காத மாற்றுத்திறனாளிகள். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொகையை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உஷா சேர்த்து வைத்துள்ளார். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.35,500 வரை சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி, அதோடு அரை பவுன் தங்க தோடையும் வைத்து கணவருக்கு தெரியாமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில், ராஜதுரை தனது குடிசையை பசுமை வீடுகள் திட்டத்தில் அனுமதி பெற்று வீடாகக் கட்டும் பணியை தொடங்கி உள்ளார். இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டியபோது பிளாஸ்டிக் பையில், பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர். அவர் ‘அந்த பணம் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்தது’ என்று சைகை மூலம் தெரிவித்தார். அவர்கள், 2016லேயே மத்திய அரசு அந்த நோட்டை செல்லாது என அறிவித்து விட்டதை தெரிவித்ததும், அதிர்ச்சியில் தாயும், மகளும் கதறி அழுதனர். இதை பார்த்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.

Related Stories: