நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணி தொடங்கியதா? கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம்

நாகை: நாகை அருகே ஓஎன்ஜிசி ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுமான பொருட்கள் இறங்கியதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு பூமியில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2012ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மீண்டும் கடந்த 2017ம் ஆண்டு எரிவாயு எடுக்க முதற்கட்ட பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் துவக்கியது. இதனால் 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

இதைதொடர்ந்து பொதுமக்கள், விவசாயிகளிடம் நடந்த பேச்சு வார்த்தையில் ஹைட்ரோகார்பன், எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட எந்த பணிகளும் குருவாடி கிராமத்தில் நடைபெறாது என ஓஎன்ஜிசி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது.

இந்தநிலையில், ஊரடங்கை பயன்படுத்தி சில நாட்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் ஆழ்துளை கிணறு மற்றும் ரிக் அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து, நேற்று மாலை பொக்லைன் இயந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றி இடத்தை தூய்மை செய்துள்ளனர். கருங்கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் இறங்கி குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஓஎன்ஜிசி நிர்வாகம் கூறியுள்ள நிலையில் திடீரென கட்டுமான பொருட்கள் இறங்குவதற்கான காரணம் என்ன? காங்கிரீட் வேலைகள் நடைபெற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளை அப்பகுதி விவசாயிகள் எழுப்பியுள்ளனர். மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் ஓஎன்ஜிசி நிர்வாகம் மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், குருவாடி கிராமத்தில் எந்தவிதமான எரிவாயும் கிடைக்கவில்லை. அந்தபகுதியில் உள்ள எந்திரங்களை அகற்றப்படும். அதற்கான வேலைகள் மட்டுமே நடைபெறுகிறது என்று விளக்கம் அளித்தனர்.

Related Stories: