அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது தொலைக்காட்சி வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் மற்றும் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட தேர்வை எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. 34,842 மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வை எழுதவில்லை. 27ம் தேதி 718 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஒப்புதல் அளித்துள்ளனர். மற்ற மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வு எழுதலாம். இதற்காக அனைத்து இடங்களிலும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்.

நுழைவுச்சீட்டு அந்தந்த பள்ளியில் வழங்கும்போதே முக கவசமும் வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது, தொலைக்காட்சி வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும். இதை வரும் 14ம் தேதி  முதல்வர் தொடங்கி வைக்கிறார். பள்ளி கல்வித்துறை தொடர்பாக யார் கருத்து கூறினாலும் அரசு ஏற்கும். திட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலையில் யாராவது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகளை கூறினால் அது செயல்படுத்தப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Stories: