சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை சிறையில் மேலும் 3 போலீசார் அடைப்பு: எஸ்ஐ உள்பட இருவருக்கு ஜிஹெச்சில் சிகிச்சை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவலர்களால் தாக்கப்பட்டு பலியான விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீசார் முத்துராஜ், முருகன் ஆகியோரை கைது செய்தனர். பாதுகாப்பு காரணமாக 5 பேரும் கடந்த 4ம்தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் விசாரணைக்குப்பின் நேற்று முன்தினம் இரவு எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீசார் வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களில் பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீஸ் வெயிலுமுத்து ஆகியோர் நீதிபதி உத்தரவின்படி நேற்று  அதிகாலை 2 மணியளவில் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். ஜாமீன் மனு தள்ளிவைப்பு: கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பாலகிருஷ்ணன் ஆகியோரது ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லோகேஸ்வரன் நேற்று விசாரித்தார். விசாரணைக்குபின், 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி உள்ளோம்: சிபிசிஐடி ஐஜி சங்கர் நேற்று அளித்த பேட்டியில் ‘‘இதுவரை 20க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்து தலைமைக் குற்றவியல் நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். அந்த காட்சிகள் பதிவான டிவிஆர் கருவிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் வந்ததும் ஆவணங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

* மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை தொடர்பாக கோவில்பட்டி ஜேஎம் 1 கோர்ட் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், கோவில்பட்டி கிளைச் சிறையில் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினார். வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சிறையில் அடைத்தபோது ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள், மருத்துவச் சான்றுகளை மாஜிஸ்திரேட் பார்வையிட்டதாகவும், கைதிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

* சிபிஐ விசாரணை இன்று துவக்கம்: ஐகோர்ட் கிளையில் தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்ளிட்ட 10 பேரை, சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர். ஒரு சாட்சியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. முறையாக விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு ஆஜராகி, ‘‘இந்த சம்பவம் குறித்து சிபிஐ தரப்பில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ ஏடிஎஸ்பி சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நாளை (இன்று) முதல் விசாரணையை துவக்குகின்றனர். தேவையான உதவிகளை செய்து தருமாறு தமிழக தலைமை செயலரிடம் கேட்டுள்ளோம்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், சிபிசிஐடி தரப்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். கைது செய்தவர்களை 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையான நடவடிக்கையை, சிபிஐ அல்லது சிபிசிஐடி தரப்பில் மேற்கொள்ள உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: