வாகன சோதனையில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு

சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மலையான்குளம் அருகே ஜெருசலேம் தர்மநகரைச் சேர்ந்தவர் தங்கதுரை(27). இவர் நண்பர் ராமகிருஷ்ணனுடன் கடந்த ஜனவரி 22ம்தேதி புளியங்குடி ரோட்டில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ரோந்து சென்ற எஸ்எஸ்ஐ சங்கரநாராயணன், காவலர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் நிறுத்தி விசாரித்து தாக்கியதுடன், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக கூறி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சத்திய பிரபாவும் அவதூறாக பேசி அடித்து உதைத்துள்ளார். பின்னர் போலீசாரை தாக்கியதாக தங்கதுரை மீது வழக்கு பதிந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் ஜாமீனில் வந்த அவர், போலீசார் தன்னை தாக்கியதாக சங்கரன்கோவில் டவுன் காவல்நிலையத்திலும், நெல்லை எஸ்பியிடமும் புகார் தெரிவித்தார். சரியான நடவடிக்கை எடுக்காததால் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி விஜயலெட்சுமி விசாரித்து புகாரின் மீது தகுந்த முகாந்திரம் இருப்பின் டவுன் இன்ஸ்பெக்டர் சத்திய பிரபா, எஸ்ஐ அன்னலட்சுமி, பயிற்சி எஸ்ஐ மற்றும் 3 போலீசார் மீது வழக்குப்பதிய உத்தரவிட்டார். எனினும் போலீசார் வழக்குப் பதியாததால் தங்கதுரை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார். புகாரின் மீது முகாந்திரம் இருப்பதால் சங்கரன்கோவில் காவல்நிலையம் தவிர்த்து வேறு காவல்நிலையத்தில் வழக்குப்பதிய நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்.இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சிறப்பு எஸ்ஐ சங்கரநாராயணன், போலீசார் செந்தில்குமார், டேவிட்ராஜ், மகேஷ்குமார் ஆகிய 6 பேர் மீது நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: