பொது இடங்களில் கொரோனா தொற்றை தடுக்க 60 விநாடிகளுக்கு மேல் சிக்னலில் வாகனங்களை நிறுத்த கூடாது: போலீசாருக்கு உயரதிகாரிகள் அறிவுரை

சென்னை: கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் ஒரு நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை நிறுத்தி வைக்க கூடாது என்றும், வாகனங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். முழு ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மண்டலத்திற்குள் லாரிகள், ஆட்டோ மற்றும் கார்கள் செல்ல எந்த வித இ-பாஸ் தேவையில்லை. அதன்படி கடந்த 6 தேதி முதல் 400 தானியங்கி சிக்னல்கள் பொது போக்குவரத்து தவிர மற்ற அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் முக்கிய சாலைகளாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, வடபழனி நூறடி சாலை, ஜிஎஸ்டி சாலை, ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வழக்கம் போல், பிரதான சாலைகளில் உள்ள சிக்னல்களில் 2 அல்லது 4 நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் நிலை உள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளிடம் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் சாலையில் நின்று போக்குவரத்து சரிசெய்யும் போக்குவரத்து போலீசாருக்கும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநகரம் முழுவதும் உயர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி  போக்குவரத்து போலீசார் நேற்று முதல் பிரதான சாலைகளில் உள்ள சிக்னல்களை போக்குவரத்து காவலர்களே இயக்கி வருகின்றனர். சிக்னல்களில் ஒரு நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை நிற்க விடாமல் உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றனர்.

தற்போது பிரதான சாலையான அண்ணா சாலை காமராஜர் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் உள்ள சிக்னல்கள் 400 சிக்னல்கள் தானியங்கி சிக்னல்களாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு நிமிடம் முதல் நான்கு நிமிடங்களை  வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களை 60 வினாடிக்கு குறைவாக நேரடியாக இயக்கி வருகின்றனர். சோதனை முறையில் நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 10 முதன்மை சிக்னல்களை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் வாகனங்கள் சிக்னலில் நெருக்கமாக தேங்கி நிற்பதை தவிர்க்கவும், அதன் மூலம் நோய் பரவுவதை தவிர்க்க முடியும் எனவும் போக்குவரத்து போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Related Stories: