காதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவிப்பு இ-பாஸ் இல்லாமல் தடைகளை தாண்டி வந்த சென்னை இளைஞர்: இருவரும் திருவண்ணாமலை முகாமில் அனுமதி

திருவண்ணாமலை: சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் காதலியை தேடி, பல தடைகளை தாண்டி திருவண்ணாமலை வந்த இளைஞர், காதலியுடன் தனிமை சிறப்பு முகாமில் சேர்க்கப்பட்டார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் பெறுவது அவசியமாகும். திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை ஆகிய காரணங்களுக்கு மட்டுமே தற்போது இ-பாஸ் வழங்கப்படுகிறது. அனுமதி இல்லாமல் மாவட்ட எல்லைகளை கடந்து வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், காதலியை சந்திக்காமல் 4 மாதங்களாக தவித்த சென்னை இளைஞர், இ-பாஸ் இல்லாமல் செக்போஸ்ட் தடைகளை மீறி திருவண்ணாமலைக்கு வந்தபோது, அதிகாரிகளிடம் சிக்கி முகாமுக்கு அனுப்பிய சம்பவம் நேற்று நடந்தது.

காதலியை சந்திக்க சென்னையில் இருந்து வந்துள்ள இளைஞர், கடந்த 2 நாட்களாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், கடைகளுக்கும் சுற்றி வருவதாக, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு கடைக்கு எதிரே, காதலனும், காதலியும் பேசிக்கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருவதும் தெரியவந்தது. மாதம்தோறும் திருவண்ணாமலைக்கு கிரிவலம்  வரும்போது  காதல் மலர்ந்ததாகவும், கடந்த 4 மாதங்களாக காதலியை காண முடியாமல் தவித்ததால், செக்போஸ்ட் தடைகளை தாண்டி வந்ததாகவும் இளைஞர் தெரிவித்தார். தொடர்ந்து, காதலர்களை திருவண்ணாமலையில் உள்ள தனிமை சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: