பேசின்பிரிட்ஜ் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நள்ளிரவில் செயல்படும் மீன் மார்க்கெட்: சமூக இடைவெளியின்றி வியாபாரம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பெரம்பூர்: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காசிமேடு மீன் மார்க்கெட் கூட்ட நெரிசலாக காணப்பட்டதால், அதை மூடினர். சென்னையில் பல மீன் மார்க்கெட்கள்  வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன. அதன்படி, பட்டாளம் மீன் மார்க்கெட் மூடப்பட்டது. இந்நிலையில், அங்கு மீன் வியாபாரம் செய்த வியாபாரிகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தற்போது, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட யானைகவுனி சாலை சால்ட் கோட்ரஸ் பகுதியில், ஊரடங்கு உத்தரவை மீறி, நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தினமும் மீன் மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து தினமும் 3 கன்டெய்னர்களில் மீன்கள் இங்கு  கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதை சென்னையில் உள்ள பல மொத்த மீன்  வியாபாரிகள் வாங்கி சென்று தங்களது பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இரவு நேரத்தில் அந்த இடத்தில் குவிந்து, சமூக இடைவெளியின்றி மீன் வாங்குவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த இடத்திலிருந்து புளியந்தோப்பு கே.பி.பார்க் கொரோனா கேர் மையம் 300 அடி தூரத்தில்தான் உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் நள்ளிரவில் மீன் வியாபாரிகள் போடும் கூச்சலால் இவர்களது தூக்கம் பாதிக்கப்படுகிறது.

சென்னையில் ஊரடங்கு உத்தரவுப்படி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியில் வரவும், கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒரே நேரத்தில் 300 பேர் திரண்டு, வியாபாரம் செய்வது எப்படி சாத்தியம் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து பலமுறை காவல் துறை மற்றுமற் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. தற்போது, மீன் வியாபாரம் செய்யும் இடத்தை சுற்றி சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* ஒரு பெட்டிக்கு ரூ.150 வசூல்

பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மீன் விற்பனை நடைபெறுவது பற்றி உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், அங்கு வரும் மீன்  வியாபாரிகளிடம் ஒரு பெட்டிக்கு ரூ.150 வீதம் வசூல் செய்து, மீன் விற்பனைக்கு மறைமுக அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: