×

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நன்றி குங்குமம் தோழி

ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்துகொள்வதே பெரும் சிக்கலாகி இருக்கையில், திருநங்கைகளும் திருநம்பிகளும் தாங்கள் விரும்பியபடி  திருமணம் செய்வதென்பது மிக மிக அரிது. கேரளாவில் அப்படியொரு திருமணம் நடந்துள்ளது.

திருநங்கைகளும் திருநம்பி களும் தங்களது பாலினத் தேர்வை இந்த உலகம் அங்கீகரிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். தான் எந்தப்  பாலினமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்தப் பாலினமாக தன்னை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. இன்னும் பலர்  இருட்டுக்குள் தனக்குப் பிடித்த பாலினமாக யாரும் அறியாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆணாகப் பிறந்து கொண்டாடப்பட்ட தன் பிள்ளை பருவ  வயதில் பெண்ணாக அலங்கரித்துக் கொள்வதை அதன் இயல்பென ஏற்றுக் கொள்ள அந்தக் குழந்தையைப் பெற்ற தாய் கூடத் தயாராக இல்லை.  மாற்றுப் பாலினத்தவரை கொலை செய்யும் அளவுக்குப் போகின்றனர் சில பெற்றோர்.

இன்று காலம் மாறியுள்ளது. திருநங்கை, திருநம்பி, சமபால் ஈர்ப்பினர் மற்றும் பல்வகைப் பாலினத்தவர் என அனைவரையும் சக மனிதர்களாக மதித்து  அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்  என்பதற்கான தொடர் முயற்சிகள் ஒரு புறம் நடந்து வருகிறது. மாற்றுப் பாலினத்தவர்களை  பாலியல் ரீதியாக சுரண்டுவதும், அவர்களைப் பாலியல் தொழிலாளியாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது. மாற்றுப் பாலினத்தவருக்கும் கணவன்,  மனைவி, குழந்தை என வாழ வேண்டும் என்ற ஏக்கம் மனதில் உண்டு. இயல்பில் நடப்பது வேறு.

திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ளும் ஒருவர் தனக்குப் பிடித்த ஆணை தன் கணவனாக ஏற்றுக் கொள்ளும் போக்கு இன்றளவும் உள்ளது.  அப்படித் திருநங்கையை திருமணம் செய்து கொள்ளும் ஆண் ஏற்கனவே திருமணமானவராக உள்ளார். இந்தக் கணவன் -மனைவி உறவென்பது  மனதளவில் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. சட்டப்படி அங்கீகரிக்கப்படுவதில்லை. திருநங்கைகளுக்கு இந்த பந்தம் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை.  இந்த உறவின் மூலம் பார்ட்னராக வரும் ஆண் அவர்களை ஒரு கட்டத்தில் ஏமாற்றிவிட்டுப் போகும் போது இவர்களால் அழுது புலம்புவதைத் தவிர  வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.

ஒரு சிலர் மட்டுமே திருமணம் செய்து கொண்டு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கின்றனர். இவ்வளவு போராட்டம் மிகுந்த மாற்றுப்பாலின ஏற்புக்கு  இடையில் கேரளாவை சேர்ந்த திருநம்பி இஷான், திருநங்கை சூர்யா ஆகிய இருவரும் அனைவரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டதுடன்  தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவும் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். சாதாரணக் காதலுக்கே ஆயிரம் தடைகள்  இருக்கும் போது மதங்கள் தாண்டி, பாலினம் தாண்டி இத்திருமணம் நடந்துள்ளது.

பாலின மாற்றம்

திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்த முகமது கபீர், ஷனிபா தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் இஷான். திருநம்பியான இஷான் கடந்த 3  ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். திருவனந்தபுரம் பட்டூரை சேர்ந்த விஜயகுமாரன்-உஷா தம்பதியின் மகன் சூர்யா.  இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறியுள்ளார்.

காதல் பிறந்த கதை

திருநங்கை சூர்யா கேரள தொலைக்காட்சிகளில் காமெடி வேடங்களில் நடித்தார். இது தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக பல இடங்களுக்கும்  பயணித்துள்ளார். அப்போது திருநம்பி இஷான் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு இவர்களுக்கு இடையில் காதல் மலரச் செய்தது. இருவரும் திருமண  வாழ்வில் நுழைய விரும்பி பெற்றோர் சம்மதம் பெற்றனர். இப்போது சூர்யா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இரு இல்லத் திருமணம்

இரு வீட்டாரின் சம்மதத்துடன் உறவுகளும் இணைந்து இவர்கள் திருமணத்தைப் பிரம்மாண்டப்படுத்தினர். மத சடங்குகள் இன்றி  மணமகன்-மணமகளுக்கு தாலி கட்டும் சடங்கு மட்டும் நடந்தது. கேரளாவில் முதல் முறையாக இப்படி ஒரு திருமணம் நடந்ததால் சுற்றுலாத்துறை  அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், மேயர் பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. சீமா, முக்கிய பிரமுகர்கள், தொண்டு  நிறுவனத்தினர், நண்பர்கள், உறவினர் வாழ்த்த இத்திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன்  மாற்றுப் பாலினத்தவர் குறித்த நேர்மறையான பார்வையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்படி திருமணப்பதிவு

விமரிசையான திருமணத்துடன் இவர்கள் தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்திருப்பதும் முக்கியமானது. கேரளாவில் திருநங்கையும்,  திருநம்பியும் செய்து கொள்ளும் முதல் திருமணம் என்பதால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த மாநிலத்தின் சிறப்புத் திருமணச் சட்டத்தின்  கீழ் இத்திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திருமணம் குறித்து வழக்கறிஞர் வைதேகி பாலாஜியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘‘கர்நாடக  மாநிலத்தை சேர்ந்த அக்கை பத்மஷாலி (வாசுதேவ்) திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓர் ஆண்டுக்குப் பின் 2018  ஜனவரி 2ல் இவர்கள் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் ஜனவரி 2017ல் எம்.பி.ஏ. பட்டதாரியான பாசுதேவ், மேக்னா என்ற திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். இது போன்ற  திருமணங்கள் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் ஆண் உடன் திருநங்கை திருமணம் செய்து கொண்டு அதைப்பதிவு செய்துள்ளனர். ஆனால்  கேரளாவில் திருமணம் செய்து கொண்ட இஷான்- சூர்யா இருவருமே பாலினம் மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் சிறப்புத்  திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேஷனல் லீகல் சர்வீஸ் அத்தாரிட்டி தொடுத்த ரிட் வழக்கில் உச்சநீதிமன்றம் மாற்றுப்  பாலினத்தவருக்கான உரிமைகள் பற்றி விளக்கியுள்ளது. மருத்துவ வசதி, சமூகத்தில் அங்கீகாரம் ஆகியவை அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் மாற்றுப் பாலினத்தவரின் மேம்பாட்டிற்காக சீர்படுத்தும் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது  தீர்ப்பில் கூறியுள்ளது. மாற்று பாலினத்தவர்களை அங்கீகரிக்க சட்டமே வலியுறுத்திய பின்னும் அதற்கான மாற்றங்களை நடைமுறைப்படுத்த சமூகம்  விரும்பாத காரணத்தால் இவர்களுக்கான அங்கீகாரம் தாமதமாகக் கிடைத்து வருகிறது. இத்தீர்ப்பு 2013ம் ஆண்டிலேயே வெளியாகியுள்ளது. தமிழக  அரசு திருநங்கைகள் மேம்பாட்டிற்காக பல நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இவர்கள்  வருவாயில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்தது. மூன்றாம் பாலின அடையாளம் இவர்களை வந்து சேர்ந்தது.

அரசு வேலை வாய்ப்பில் இரண்டு சதவீத இட ஒதுக்கீடு, பென்ஷன், சட்ட உதவியும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தேசிய சட்ட  மையத்தின் ரிட் மனுவுக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகள் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான நலம் பயக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டும்  என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2014ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருநங்கை ஒருவரை சட்டப்படி திருமணம் செய்து  கொள்ள விரும்பினார். இதற்காக மாவட்ட ஆட்சியரின் உதவியை நாடினார். அப்போது சட்ட வழிகாட்டி ஏதுமில்லை. அவரால் சட்டப்படி பதிவு செய்ய  முடியவில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கர்நாடகா, ஒடிசா, கேரளா என்று ஒரு சில மாநிலங்கள் மாற்றுப் பாலினத்தவரின் திருமணத்தைப்  பதிவு செய்கின்றன.

தமிழகத்திலும் இந்த மாற்றம் வர வேண்டும். மாற்றுப் பாலினத்தவருக்கான உரிமை மசோதா 2016ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய  அரசு, மாநில அரசு என்று மாறி மாறி மசோதாவைத் தாக்கல் செய்து கொண்டிருக்கும் வேளையில் நம் தரப்பில் இருந்து ஒரே ஒரு வேண்டுகோள்தான்.  அவர்களை அவர்களாக வாழ விடுங்கள். இயல்பான மனிதர்களுக்கு வழங்கும் உரிமையை அவர்களுக்கும் வழங்குங்கள். திருமணத்தை அங்கீகரித்து  சட்டப்படி பதிவு செய்ய வழி விடுங்கள். குழந்தை பிறக்க அவர்களுக்கு வழியில்லாததால் சட்டப்படியாக அவர்கள் தத்தெடுக்க தத்தெடுப்பு சட்டத்தில்  திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். விவாகரத்து, ஜீவனாம்சம் என்று ஆண், பெண்களுக்கு சட்டம் வழங்கும் இயற்கையாகக் கிடைக்கும் சட்டப்  பாதுகாப்பை அவர்களுக்கும் வழங்க வேண்டும்.

தமிழக அரசு இதற்கு முன்மாதிரியாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எனது வேண்டுகோளையும் இந்த நேரத்தில் பதிவு  செய்கிறேன்’’ என்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி. ‘‘நான் எந்தப் பால் உறுப்போடும் பிறந்திருக்கலாம். என் மனம் இந்தப் பாலினமாக வாழ்வதில்  தான் மகிழ்கிறது. இவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்’’ என முடிவெடுக்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிமை உள்ளது. சக மனிதர்  விருப்பங்களை ஏற்றுக் கொள்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் மனிதப் பண்புகளில் ஒன்றே. இஷான் சூர்யா திருமணம் ஒரு முன் மாதிரித்  திருமணம். இயற்கையோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப் பாலினத்தவரை வாழ்த்தி வரவேற்போம்!

யாழ் ஸ்ரீதேவி

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!