கொரோனாவை காரணம் காட்டி செல்போன் உபகரணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கடும் அதிருப்தி

சென்னை: செல்போன் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வந்தனர். குறிப்பாக செல்போன் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜவுளி வியாபாரங்கள் எல்லாம் தற்போது இருக்கிற ஸ்டாக்கை கொண்டு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.அதனால் வழக்கமான விலையை விட ஏற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால், எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என கருதி அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்வதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இதற்கிடையே, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் என்றால் அவர்களுக்காக இரண்டு செல்போன்களை பெற்றோர் ஒதுக்க வேண்டியுள்ளது. சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக செல்போன் முன்பு உட்கார்ந்து குழந்தைகள் பாடத்தை கவனிக்க வேண்டியுள்ளது.

பிரேக் விடும் போது அதே செல்போனில் கேம் விளையாட தொடங்கி விடுகின்றனர். குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பதால் ஹெட் போன், கவர் என ஏதாவது ஒன்றை உடைத்து விடுகின்றனர். பின்னர் அந்த பொருளை வாங்குவதற்காக கடை கடையாக ஏறி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருப்பதாக பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர். கொரோனாவை காரணம் காட்டி இப்படி அதிக விலைக்கு விற்பனை செய்யும் ஒரு சில கடை உரிமையாளர்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த கடை உரிமையாளர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகிறது.  

இந்த கொரோனா காலக்கட்டம் என்பதால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பல்வேறு குடும்பத்தினருக்கு சாப்பாடு கிடைப்பதே பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை பலர் செய்து வரும் நிலையில், ஒரு சில கடைகளில் இப்படி அதிக விலைக்கு பொருட்களை விற்பது என்பது பொதுமக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதோடு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் செயல் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: