×

சிகிச்சையில் உயிருடன் இருக்கும் கொரோனா நோயாளி இறந்ததாக கூறி 5 லட்சம் ரூபாய் பறிக்க திட்டம்: தெலங்கானா மருத்துவமனை தில்லுமுல்லு அம்பலம்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில், கொரோனா பாதித்தவர் உயிருடன் இருக்கும் நிலையில், இறந்தவிட்டதாக கூறி மேலும் ரூ.5 லட்சம் மருத்துவ கட்டணம் செலுத்துமாறு தனியார் மருத்துவமனை கூறியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த அம்பர்பேட்டையை சேர்ந்த  பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான நரசிங்க ராவ் முதிராஜூ கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு முன்பு சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவமனை நிர்வாகம் அவரது மருத்துவ சிகிச்சைக்காக இதுவரையில் ரூ.12 லட்சம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி நரசிங்க ராவ் இறந்துவிட்டதாகவும், மேலும் ₹5 லட்சம் மருத்துவ கட்டணம் செலுத்திய பிறகுதான் சடலத்தை கொண்டு செல்ல அனுமதிக்க முடியும் எனவும் அங்கிருந்த டாக்டர் தெரிவித்தாராம். இதையடுத்து நரசிங்க ராவுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது குடும்பத்தினர், வீட்டில் அனைத்து ஏற்பாடுகளையும்  செய்தனர். இதற்கிடையில், மருத்துவமனைக்கு சென்ற அவரது உறவினர்கள், நரசிங்க ராவ் சிகிச்சை பெற்று வந்த அறைக்கு சென்று பார்த்த போது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து, மருத்துவமனையின் தில்லுமுல்லு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்கள் கேட்டபோது, சரிவர பதிலளிக்காமல், விசாரிப்பதாக கூறி மழுப்பிவிட்டார்களாம், செகந்திராபாத் தனியார் மருத்துவமனை நிர்வாகம், ஏற்கனவே கொரோனா சிகிச்சை அளிப்பதாக கூறி பல லட்சம் பணத்தை சுரண்டுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.


Tags : Telangana Hospital Thillamullu ,hospital ,coroner , Treatment, corona patient, deceased, Rs 5 lakhs, plucking scheme, Telangana Hospital
× RELATED தனியார் மருத்துவமனையில் இருந்து...