பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகள் மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முறையில் அமைய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை:  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அடுத்தநாளே ஆன்லைன் வழி நடத்தப்படாது, தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என வழக்கம்போல் பல்டி அடித்திருக்கிறார். இப்படி தெளிவில்லாத நிலைப்பாடு மாணவர், பெற்றோர், மக்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எத்தனை தொலைக்காட்சிகளில் எந்தெந்த வேளைகளில் எவ்வளவு நேரம் பாடம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த ஆண்டு 30 சதவிகிதம் பாடங்களைக் குறைத்துள்ள சூழலில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முடிவென்ன? இந்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டதா? பாடம் நடத்த உரிய ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளனரா? தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்க வேண்டும். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து விடாமல் செய்வன திருந்தச் செய்து, இந்தத் துறை இருள்தீர எண்ணிச் செயல் புரிய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: