மாணவர்கள் ஆன்லைன் கல்வி முறையை பின்தொடர்ந்தால் எப்1, எம்1 விசா ரத்து என்ற அமெரிக்க அரசு அறிவிப்பை திரும்பப் பெற நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்

சென்னை: மேல்படிப்பிற்காக சென்றுள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்வி முறையை பின்தொடர்ந்தால் எப்1, எம்1 விசா ரத்து செய்யப்படும் என்கிற அமெரிக்கா அரசின் அறிவிப்பை திரும்பப் பெற மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து மத்திய சென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எம்பி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கும் 2020ம் ஆண்டின் இலையுதிர் கால செமஸ்டருக்கான வகுப்புகளை கோவிட்-19 நோய் தொற்று பரவல் அதிகமாக இருக்கும் சூழ்நிலையால், ஆன்லைன் கல்வி முறையை தேர்ந்தெடுத்திருக்கும் மாணவர்களுக்கு அமெரிக்க அரசு விசா முறையில் மாற்றங்களை அறிவித்து உள்ளது.

இலையுதிர் கால செமஸ்டரில் முழுமையாக ஆன்லைனில் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசா வழங்கமாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள எப்1 மற்றும் எம்1 விசா மாணவர்கள் முழுமையாக ஆன்லைன் கல்வி முறையில் பின்தொடர்ந்தால் அமெரிக்காவில் இனி அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மேலும் அந்நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற எப்1 மற்றும் எம்1 விசா மாணவர்கள் நேர்முக கல்வி பெறாவிட்டால் அவர்களுடைய விசாவையும் ரத்து செய்யப்படலாம் எனவும், இது சம்பந்தமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஃபெடரல் பதிவேட்டில் இந்த மாற்றங்களை இறுதி விதியாக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நடவடிக்கை என்பது அமெரிக்காவில் பயிலும் 2,00,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை நேரடியாக பாதிக்கும் என்று ஊடக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அங்கு படிக்கும் நமது இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பதை அறிய அம்மாணவர்களின் பெற்றோர் மிகுந்த கவலையுடன் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் நம் நாட்டிலிருந்து சென்றுள்ள  மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா சம்பந்தமான விலக்குகளை குறைந்தபட்சம் கோவிட்-19 நிலைமை சீராகும் வரை நீட்டிப்பதே சிறந்த செயலாகும்.

இதை வலியுறுத்தி மத்திய அரசு போர்க்கால நடவடிக்கைகளாக முயற்சிகளை செயல்படுத்திட வேண்டும். அமெரிக்கா பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்தியா உள்ளிட்ட மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு உதவியாக சுமார் 40 பில்லியன் டாலர் தொகையினை பங்களிப்பு செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4,00,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறார்கள் என சர்வதேச கல்வியாளர்களின் சங்கம் கூறி வருகிறது. இது மட்டுமல்லாமல், பல்வேறு கட்டணங்களால் அமெரிக்க பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்க அரசின் சமீபத்திய விசா நடவடிக்கை ரத்து என்பது கோவிட்-19 நெருக்கடி நேரத்தில் இம்மாணவர்களுக்கு மேலும் நெருக்கலை உண்டாக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. எனவே பிரதமர் நம் நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: