சித்த மருத்துவத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் பாகுபாடு காட்டுவது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சென்னை: மத்திய, மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது எனறு கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம் சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக சித்த மருத்துவர் தணிகாசலம் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன், வி.எம் வேலுமணி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர் தன்னிடம் கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என தெரிவிக்கும் போது, அதை பரிசோதிப்பதை விடுத்து, ஏன் அவரை கைது செய்யவேண்டுமென கேள்வி எழுப்பினர். இதையடுத்து நீதிபதிகள், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினாலே சந்தேகப்படும் சூழல் நிலவுகிறது.

60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழக அரசிடம் தெரிவித்தும், அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையை அவர் நாடியுள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்போது அவரின் மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே அவரது மருந்தை அரசு பரிசீலனை செய்திருந்தால், இந்நேரம் அந்த மருந்து கூட வெளி வந்திருக்கும். மத்திய - மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. சித்த மருத்துவம் புறக்கணிக்கப் படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அலோபதி சிகிச்சையுடன் கபசுர குடிநீர் கொடுத்தது சித்த மருத்துவ சிகிச்சை தான். எந்தவித உயிரிழப்பும் இன்றி சிறைவாசிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட  கொரோனா தொற்று நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார் சித்த மருத்துவர் வீரபாபு. அவரை பாராட்டுகிறோம். அரசிடம் இத்தகைய மனப்போக்கு இருந்தால் அது யாருக்குமே பயனின்றி போய்விடும். தன்னிடம் தொற்றுக்கு மருந்து உள்ளதாக யாரேனும் தெரிவித்தால் அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?

அதனை பரிசோதித்ததில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது?

அவற்றில் எத்தனை மத்திய  ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?

 தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?

 தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனரா?

 மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி ஹோமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது? இவற்றுக்கான முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? நம் நாட்டு மருத்துவர்களுக்கு போதிய கட்டமைப்பையும், உரிய பண உதவியையும் செய்து சித்த மருத்துவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை இந்த வழக்கில் நாங்கள்   இணைக்கிறோம். இந்த நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: