12 சதவீதம் என வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு சானிடைசருக்கு ஜிஎஸ்டி எவ்வளவு? பரிந்துரை கடிதத்தால் திடீர் சர்ச்சை; ரெய்டு அச்சத்தில் நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள்

புதுடெல்லி: கொரோனா பரவல் துவங்கியதில் இருந்தே சானிடைசர் மற்றும் சோப் ஹேண்ட்வாஷ்களுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பயன்படுத்த எளிது, பாதுகாப்பானது என்பதால் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களுக்கு வரவேற்பு அமோகம். இதனால் பலர் தாங்களாகவே சானிடைசர் தயாரிக்க துவங்கி விட்டனர். அதோடு சில சர்க்கரை ஆலைகளும் ஆல்கஹால் சானிடைசர் தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சானிடைசர் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு, ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பின் இயக்குநர்கள் மற்றும் முதன்மை ஆணையர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், சானிடைசருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி தான் வசூலிக்க வேண்டும். ஆனால் ஆல்கஹால் சானிடைசர் தயாரிக்கும் சில நிறுவனங்கள் மருந்து பொருட்கள் என்ற வகையில் குறிப்பிட்டு 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்துகின்றன.

அவை கிருமிநாசினி என வகைப்படுத்தப்பட வேண்டும். இதன்படி 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதற்கான  வாய்ப்புகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சானிடைசர் தயாரிக்கும் சுமார் 62 நிறுவனங்களின் ஆவணங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் அதோடு, சானிடைசர் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகள் மேற்கண்டவாறு தவறாக வகைப்படுத்தி 12 சதவீதம் மட்டுமே செலுத்துகின்றனவா என ஆராயுமாறு கள ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் படலாம் என்ற அச்சம் சானிடைசர் தயாரிப்பு நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ளது.

* 1966 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நர்சிங் மாணவர் ஒருவர் ஆல்கஹால், ஜெல் கலந்த சானிடைசர் தயாரித்ததாக கூறப்படுகிறது.

* இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு சானிடைசர் பயன்பாடு 4 முதல் 5 மடங்கு உயர்ந்துள்ளது.

* தனியார் அமைப்பு ஒன்றின் ஆய்வின்படி, கடந்த ஆண்டில் ரூ.10 கோடியாக இருந்த சானிடைசர் வர்த்தகம், ரூ.43 கோடியை தாண்டிவிட்டது.

* ஜெர்மனியை சேர்ந்த. ஹார்ட்மன் நிறுவனம் முதன் முதலாக சானிடைசர்களை சந்தைப்படுத்தியது.

Related Stories: