இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எல்லையில் இனி வன்முறை நடக்காது: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்னை விவகாரத்தில், இனிமேல் வன்முறை எதுவும் நிகழாமல் பார்த்து கொள்ளப்படும் என்று இரு தரப்பிலும் முடிவு எட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதம் முதல் ஊடுருவத் தொடங்கிய சீனா, கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.  

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியாகினர். ஆனால் சீனா இதனை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. மாறாக, அமைதி காத்து வருகிறது.

இதையடுத்து, இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடத்தப்பட்டது. இதில் எல்லைப் பகுதியில் இருந்து இரு தரப்பும் படைகளை திரும்ப பெறுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ  உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பிரச்னைக்குரிய காக்ரா, ஹாட் ஸ்பிரிங், கல்வான் பள்ளதாக்கில் உள்ள பேட்ரோலிங் பாய்ண்ட் 14, பேட்ரோலிங் பாய்ண்ட் 17, பிங்கர் ஏரியா 4 மற்றும் பிங்கர் ஏரியா 8 பகுதிகளில் இருந்து, சீனா படைகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

படைகளை விலக்கி கொண்ட பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் அஜித் தோவல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடையே நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,` இனி வரும் காலத்தில் எல்லை பகுதியில் இதுபோன்ற வன்முறை நடக்காமல் பார்த்து கொள்வது என இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

* இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

அஜித் தோவல், வாங் யீ இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, காக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்து முதலில் 1 கி.மீ, மறுநாள் 2.5 கி.மீ என படைகளை திரும்ப பெற்று வந்த சீனா, மூன்றாவது நாளான நேற்று, படைகள் முழுவதையும் திரும்ப பெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, 3 பகுதிகளிலும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து இன்று மீண்டும் இருதரப்பில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Related Stories: