×

எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க வியாபாரியிடம் ரூ.61.50 லட்சம் திருடிய வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த 2 பேர் கைது

திருமலை: கடப்பா அருகே கருடாத்ரி எஸ்பிரஸ் ரயிலில் தங்க வியாபாரியிடம் ரூ.61.50 லட்சத்தை திருடிய திருவள்ளூரை சேர்ந்த 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சவுடேஸ்வரராவ், தங்க நகை வியாபாரி. இவர் கடந்தாண்டு அக்டோபர் 30ம் தேதி கடப்பாவில் இருந்து சென்னை செல்ல ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். தனது பையில் இருந்த ரூ.61.50 லட்சத்தை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினார். புத்தூர் அருகே சென்றபோது தனது பணப்பை திடீரென மாயமானது.

இதுகுறித்து, சவுடேஸ்வரராவ் புத்தூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். ரயில்வே டிஜிபி துவாரகா திருமலை ராவ், விஜயவாடா ரயில்வே எஸ்.பி. விஜயாராவ் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார், திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஆகிய ரயில்வே போலீசாருடன் இணைந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், தங்க வியாபாரியிடம் பணத்தை திருடியது, திருவள்ளூரை சேர்ந்த சுப்பிரமணி என்ற பாட்டில் மணி மற்றும் இருதயராஜ் என்பது தெரியவந்தது.

இந்த திருட்டு வழக்கில் தற்போது தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் சுப்பிரமணி, இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கடப்பா போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.18.50 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள், டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி சிறையில் உள்ள ராஜேந்திரனையும் கைது செய்து விசாரிக்கப்படுவார் என ரேணிகுண்டா ரயில்வே டிஎஸ்பி ரமேஷ்பாபு கூறினார்.

Tags : persons ,Thiruvallur ,dealer , Express train, gold dealer, Rs 61.50 lakh, 2 arrested
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...